சென்னை: திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது பற்றி விவாதிப்பதற்காக மத்திய அரசு கடந்த 30-1-2015ல் டெல்லியில் ஒரு கூட்டத்தைக் கூட்டி, அதில் கலந்து கொள்ள தமிழக அரசின் உயர் அதிகாரி ஒருவரை அனுப்பி வைக்க வேண்டுமென்று கடிதம் எழுதியது. அதற்கு தமிழக அரசின் சார்பில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் எழுதிய பதிலில் அகதிகள் இலங்கைக்கு திரும்புவதற்கான சூழ்நிலை இன்னமும் ஏற்படவில்லை என்பதால் அந்த கூட்டத்தைத் தள்ளிவைக்க வேண்டுமென்று 28-1-2015ல் தெரிவித்திருந்தார்.அது பற்றி நான் விடுத்த அறிக்கையில், ஈழத் தமிழர் நல் வாழ்வுக்கு ஆற்றப்பட வேண்டிய பணிகள் பற்றியும் எடுத்துரைக்க கிடைத்த அருமையான வாய்ப்பினை இழக்கின்ற அளவுக்கு முதல்வரின் கடிதம் உள்ளது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ் அகதிகளை நல்ல முறையில் வாழ வைக்க வேண்டும், அதற்கான உறுதியைத் தர வேண்டுமென்ற செய்தியை அங்கே தெரிவிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை அல்லவா? என்று நான் கேட்டிருந்தேன்.
இதற்கு 4 நாட்கள் பொறுத் திருந்து பன்னீர்செல்வம் விடுத்துள்ள பதிலில் இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப துடிக்கிறார் கருணாநிதி என்று அப்பட்டமான பொய்யை சொல்லியிருக்கிறார். முதல்வர் அறை என்று தனது அறையில் போர்டு மாட்டிக் கொள்ளவோ, அரசாங்க காலண்டரில் ஆண்டுதோறும் வெளியிடுவதைப் போல இன்றைய முதல்வரின் புகைப்படத்தைப் போட்டுக் கொள்ளவோ, குடியரசு தின அணி வகுப்பில் வந்த வாகனங்களில் ஒன்றில் கூட தனது புகைப்படத்தை வைத்துக் கொள்ளவோ துணிச்சல் இல்லாமல், முதல்வரே இல்லாத மாநிலம் தமிழகம் எனும் அவப் பெயரை உருவாக்கி வரும் பன்னீர்செல்வத்துக்கு எனக்குப் பதில் சொல்லி அறிக்கை விடவும், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதவும் மட்டும்தான் அனுமதி உண்டு போலும்.
என்னைத் தாக்கி அறிக்கை விட்டால்தான் அம்மையார் மனம் குளிரும், தன்னுடைய பதவி நிலையைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதற்காக அவர் அறிக்கை விடுவாரானால், அவருடைய ஆசை நிறைவேறி பிழைத்துப் போகட்டும். நான் அதைத் தடுக்க விரும்பவில்லை. ஆனால் பதில் அறிக்கை என்ற பெயரால் இல்லாததையும், பொல்லாததையும் எழுத்தாக்கி, அரசியல் பிழைப்பு நடத்த முயன்றால் வாங்கிக் கட்டிக் கொள்ளத்தான் வேண்டும். ஈழத் தமிழர்கள் பால் உள்ள காழ்ப்புணர்ச்சி எனக்கு இன்னமும் தணியவில்லை என்று பன்னீர்செல்வம் அறிக்கை விடுகிறார். இலங்கை தமிழர்கள் பால் எனக்கா காழ்ப்புணர்ச்சி? இவரும், இவரது அம்மாவும் பிறப்பதற்கு முன்பே 1956ல் அண்ணா முன்னிலையிலேயே சிதம்பரம் திமுக பொதுக் குழுவில் இலங்கைத் தமிழர்களுக்காகத் தீர்மானத்தை முன்மொழிந்தவன் நான். இலங்கைத் தமிழர்களுக்காக நான் பங்கேற்று, திமுக தொடர்ந்து நடத்திய போராட்டங்கள் எத்தனை எத்தனை என்ற கணக்காவது பாவம், பன்னீர் செல்வத்திற்கு தெரியுமா?
இலங்கை தமிழர்களுக்காகவும், அகதிகளுக்காகவும் அம்மா வழங்கிய சலுகைகளை இவர் பட்டியலிட்டாராம். தமிழக சட்டப் பேரவையில் பிரபாகரனைக் கைது செய்து கொண்டு வர வேண்டுமென்று இவருடைய அந்த அம்மா நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு என்ன பதில் என்று கேட்டிருந்தேனே? அதை ஏன் பன்னீர் வசதியாக விட்டு விட்டார்? அதற்கு என்ன பதில்? எங்கே பதில்?ஈழத் தந்தை என அழைக்கப்படும் செல்வா மகனும், ஈழ அகதிகள் மறுவாழ்வுக்கான அமைப்பின் பொருளாளருமான சந்திர ஹாசன் கூறுகையில், அகதிகள் நாடு திரும்புவதில் தமிழக அரசியலைப் புகுத்தாமல், விரும்பி நாடு திரும்புவோரை உரிய முறையில் மகிழ்ச்சியுடன் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
உண்மையில் நான் எனது அறிக்கையில், இலங்கை அகதிகளும் இலங்கையில் முன்னாள் அதிபர் ராஜபக்சே அரசின் கொடுமையினால் புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களும், மீண்டும் தாயகம் திரும்பி, நிம்மதியாக வாழ வேண்டு மென்று விரும்புவது ஒரு புறம் இருந்தாலும், அவர்கள் இலங்கைக்குத் திரும்பினால் என்ன நடக்கும் என்று தெரியாமல் அங்கே செல்லலாமா என்பது பற்றி டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு கலந்து கொண்டு தன் கருத்தைத் தெரிவித்திருக்கலாமே என்று தான் நான் கூறியிருந்தேன்.
இதை முதல்வர் பன்னீர் செல்வம் வேண்டுமென்றே திரித்து திசை திருப்பிடும் வகையில் அறிக்கை விடுத்துள்ளார். இறுதியாக பன்னீர்செல்வம் ஒரு குறளைக் குறிப்பிட்டு தன் அறிக்கையை முடித்திருக்கிறார். அந்தக் குறள், கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து என்பதாகும். அதாவது காலம் கை கூடும் வரையில் கொக்கு போல் பொறுமையாக காத்திருக்க வேண்டும். காலம் வாய்ப்பாக கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும் என்பது தான் அதன் பொருள். இந்தக் குறளை பன்னீர்செல்வம் சுட்டிக் காட்டியிருப்பது எனக்காகவா? அல்லது அவருடைய அம்மாவுக்காகவா?இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.