நாமக்கல்: நாமக்கல் அருகேயுள்ள காரைக்குறிச்சிபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவி அம்பிகா கடந்த 23ம் தேதி வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அரையாண்டு தேர்வில் அம்பிகா 5 பாடத்திலும் பெயில் மார்க் வாங்கியதால், அவரை வகுப்புக்கு வர வகுப்பாசிரியர் ராஜூ அனுமதிக்கவில்லை. தேர்வு எழுத தமிழ் ஆசிரியை கோகிலாவும் அனுமதிக்கவில்லை. இதை பள்ளியின் தலைமை ஆசிரியர் அறிவழகன் கண்டுகொள்ளவில்லை. இதனால் மனவேதனை அடைந்த மாணவி வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து நாமக்கல் சி.இ.ஓ நடத்திய விசாரணையில், மேற்கண்ட தகவல்கள் வெளிவந்தது.
இதையடுத்து 3 ஆசிரியர்களும் கல்வித்துறை அதிகாரிகளின் நடவடிக்கையில் சிக்கியுள்ளனர். வகுப்பாசிரியர் ராஜூ மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து கடந்த வாரம் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இந்நிலையில், தமிழ் ஆசிரியை கோகிலா நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தலைமை ஆசிரியர் அறிவழகன் கொல்லிமலையில் உள்ள அரியூர்புதுவளவு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த இரு ஆண்டுக்கு முன் தான் காரைக்குறிச்சிபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வந்தார். பணியில் இருந்து ஓய்வு பெற இன்னும் 4 மாதமே உள்ள நிலையில் தற்போது கல்வித்துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார்.