புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இன்று கடைசிநாள் என்பதால் பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி சட்டப்பேரவைக்கு 2013ல் தேர்தல் நடந்தது. பாஜ 31, ஆம் ஆத்மி 28, காங்கிரஸ் 8 தொகுதிகளில் வெற்றிபெற்றன. அதிக இடங்களை பிடித்தும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் பாஜ ஆட்சி அமைக்கவில்லை. காங்கிரசின் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது. முதல்வராக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் பொறுப்பேற்றார். ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். ஆம் ஆத்மியின் ஆட்சி 49வது நாளில் முடிவுக்கு வந்தது. எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராததால், ஜனாதிபதி ஆட்சி அமலாகியது. கடந்த சில மாதங்களுக்கு முன் பேரவை கலைக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 7ல் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தமுறை ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் சுறுசுறுப்பாகின. ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகியவை முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்தது. இந்த தேர்தலில் கேஜ்ரிவாலுக்கு செல்வாக்கு கூடிவரும் நிலையில், முதல்வர் வேட்பாளராக கிரண்பேடியை பாஜ களம் இறக்கியது. காங்கிரஸ் கட்சி, அஜய் மக்கானை முன்னிலைப்படுத்தி வருகிறது. மும்முனை போட்டி நிலவி வந்தாலும், பாஜ, ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையேதான் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆம் ஆத்மியின் செல்வாக்கு பாஜவைவிட சற்று உயர்ந்துள்ளதாக கருத்துகணிப்பு கூறுகிறது. எனவே, பாஜ தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று பொதுகூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசுகையில், ‘‘கருத்து கணிப்புகளை நம்ப வேண்டாம். காற்று நம்முடைய பக்கம் வீசுகிறது. என்னுடைய அரசியல், மக்களின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டே இருக்கும். குழந்தைகள் தரமான கல்வியை பெற வேண்டும். அனைவருக்கும் மருத்துவ வசதி அவசியம். இவை அனைத்தையும் வழங்க பாஜவுக்கு ஆதரவு தரவேண்டும்’’ என்றார்.
இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவுபெறுவதையொட்டி, 70 தொகுதிகளிலும் பாஜ பேரணி நடத்த அமித்ஷா உத்தரவிட்டார். ஒவ்வொரு தொகுதியிலும் அமைச்சர்கள் அல்லது எம்பிக்கள் தலைமையில் இந்த பேரணி நடைபெறுகிறது. ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியினரும் இறுதிகட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வரும் 10ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.