புதுடெல்லி: நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரு மாதத்தில் 201 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்தாண்டை காட்டிலும் தற்போது இக்காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருப்பது மத்திய அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சலை தடுக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து கடந்த 2ம் தேதி வரை 201 பேர் இக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர்.ராஜஸ்தான், தெலங்கானா, குஜராத், டெல்லி ஆகிய இடங்களில் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தெலங்கானாவில் 34 பேரும், மத்திய பிரதேசத்தில் 24, குஜராத்தில் 42, டெல்லியில் 5 பேரும் இக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பன்றி காய்ச்சலுக்கு கடந்தாண்டு முழுவதும் மொத்தம் 216 பேர் பலியாகினர். ஆனால் இந்தாண்டில் ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 201 பேர் இக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். வேகமாக பரவிவரும் பன்றி காய்ச்சலை தடுக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. பன்றி காய்ச்சல் பரவிவரும் மாநிலங்களை சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலர் சர்மா, வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
தெலங்கானா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம், உத்திரபிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களை சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். பன்றி காய்ச்சல் சிகிச்சைக்கு மருந்துகள், உபகரணங்கள் போன்றவை அதிகளவில் தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பன்றி காய்ச்சலை தடுக்க மத்திய அரசு போதிய ஒத்துழைப்பை வழங்கும் என தெரிவித்த ஷர்மா, பன்றி காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.