ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் கருட சேவை- பக்தர்கள் குவிந்தனர்
திருச்சிஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தை தேர்த் திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4ம் நாளான நேற்று காலை நம்பெருமாள் இரட்டை பிரபை வாகனத்தில் எழுந்தருளி உள் திருவீதி வலம் வந்தார். பின்னர் வாகன மண்டபத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி வீரேஸ்வரம் பகுதி யில் உள்ள ஆஸ்தான மண்டபமான கருடமண்டபத்திற்கு பகல் 12 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர், மாலை 6 மணிக்கு ஆஸ்தான மண்டபமான கருட மண்டபத்திலிருந்து நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி அம்மா மண்டபம் ரோடு, ராஜகோபுரம் வழியாக நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு வாகன மண்டபம் வந்து சேர்ந்தார். இது இந்த ஆண்டின் முதலாவது கருடசேவை என்பதால், பக்தர்கள் குவிந்தனர்.5ம் நாளான இன்று அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தில் எழுந்தருளினார். 5.15 மணிக்கு மேற்படி மண்டபத்திலிருந்து சேஷ வாகனத்தில் புறப்பாடாகி உள்திருவீதி வலம் வந்து 6 மணிக்கு வாகன மண்டபம் சேர்ந்தார். 7.30 மணிக்கு அங்கிருந்து பல்லக்கில் புறப்பட்டு 10.30 மணிக்கு டிரான்ஸ்லேட்டர் ராமராவ் மண்டபம் வடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மாலை 6.30 மணிக்கு ஹனுமந்த வாகனத்தில் புறப்பட்டு உள்வீதி வலம் வந்து இரவு 8.15 மணிக்கு மீண்டும் வாகன மண்டபம் வந்தடைகிறார். இரவு 9.15மணிக்கு கண்ணாடி அறையை அடைகிறார்.