ஜகார்த்தா: இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் சுரபயா விமானநிலையத்தில் இருந்து கடந்த மாதம் 28ம் தேதி அதிகாலை 162 பயணிகளுடன் ஏர் ஆசியா விமானம் சிங்கப்பூருக்கு கிளம்பியது. இந்தோனேஷிய வான் எல்லையில் வானிலை மோசமாக இருந்ததால், விமானத்தின் உயரத்தை அதிகரிக்க, கட்டுப்பாட்டு அறையின் அனுமதியை விமானி கேட்டார். அனுமதி கிடைப்பதற்குள் அந்த விமானம் வழிதவறி சென்று போர்னோ நாட்டின் அருகே ஜாவா கடற்பகுதிக்குள் விழுந்து மூழ்கியது.இதைத் தொடர்ந்து ஏர் ஆசியா விமானத்தை இந்தோனேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அதிநவீன போர் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டன. விமானத்தின் வால் உட்பட பல்வேறு பாகங்கள் மீட்கப்பட்டன. விமானத்தின் செயல்பாடுகளை பதிவு செய்யும் கறுப்பு பெட்டியும் மீட்கப்பட்டது.
அந்த கறுப்பு பெட்டியை இந்தோனேஷிய விமான போக்குவரத்து பாதுகாப்பு கமிட்டியை சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த பெட்டியில் பதிவான தகவல்களின்படி, அந்த விமானம் வழிதவறி செல்லும்போது, விமானத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம். அதை சரிசெய்வதற்கு விமானியும் துணை விமானியும் முயற்சி செய்யும்போது, அந்த விமானம் அவர்களின் கட்டுப்பாட்டை மீறி கடலுக்குள் பெருத்த சத்தத்துடன் விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று இந்தோனேஷிய புலனாய்வு அதிகாரி தகவல் கூறினார்.தற்போது கடலுக்குள் மூழ்கிய விமானத்தை மீட்பதற்கு 2 ராட்சத பலூன்கள் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இன்று காலை அந்த ராட்சத் பலூன்களை இயங்க செய்து, அதன் மூலம் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் கடலுக்கு அடியே சென்று விமானத்தை மீட்கும் பணியில் ஈடுபடுகின்றனர் என்று இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.