டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் நேற்று காலை ஓடும் பஸ்ஸில் பாலஸ்தீனியர் ஒருவர் கத்திகுத்து தாக்குதலில் ஈடுபட்டார். அவரது தாக்குதலில் டிரைவர் உட்பட 12 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவரை முன்னாள் சிறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு கைது செய்தார் என்று இஸ்ரேலிய ரேடியோ தகவல் தெரிவிக்கிறது.இஸ்ரேல் நாட்டின் வர்த்தக தலைநகர் டெல் அவிவ். இங்கு நேற்று காலை 50க்கும் மேற்பட்ட பயணிகள் ஒரு பஸ்ஸில் பயணம் செய்தனர். அப்போது பாலஸ்தீனியர் ஒருவர் திடீரென கத்தியால் பயணிகளை தாக்கத் தொடங்கினார். அத்துடன், பஸ் டிரைவரை வேறொரு பகுதிக்கு பஸ்ஸை ஓட்டுமாறு கூறினார். டிரைவர் அதற்கு மறுக்கவே, அவரை கத்தியால் பலமுறை தாக்கினார். இதில் டிரைவர் உட்பட 12 பயணிகள் படுகாயம் அடைந்தனர். மேலும் பலர் திடீர் தாக்குதல் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பஸ்ஸுக்குள் நடைபெறும் பாலஸ்தீனியரின் கத்திகுத்து தாக்குதலை ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்ற முன்னாள் சிறை அதிகாரி ஒருவர் பார்த்தார். உடனே அவர் தனது வண்டியை விட்டுவிட்டு, பஸ்ஸுக்குள் தாவி ஏறினார். அந்த பாலஸ்தீனியர் மீது மிளகு தூளையும் கண்ணீர் புகை குண்டையும் வீசி நிலைகுலைய வைத்து பஸ்ஸை விட்டு கீழே இறக்கினார். அந்த பாலஸ்தீனியர் பஸ்ஸை விட்டு இறங்கியதும் தப்பி ஓட முயற்சித்தார்.இதைத் தொடர்ந்து, அந்த சிறை அதிகாரி துப்பாக்கியை எடுத்து அவனது காலில் சுட்டதால், அவன் நிலைகுலைந்து கீழே விழுந்தான். இதுகுறித்து தகவல் அறிந்ததும் டெல் அவிவ் போலீசார் விரைந்து வந்து, அந்த பாலஸ்தீனியரை கைது செய்தனர். தற்போது அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
பாலஸ்தீனியரின் கத்திகுத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த 12 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் 9 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலஸ்தீனத்தை சேர்ந்த 23 வயதான ஹம்சா மாத்ருக் என்றும், அவன் இஸ்ரேல் நாட்டில் அத்துமீறி நுழைந்து துல்க்ரம் அகதி முகாமில் தங்கியிருந்த விவரம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று டெல் அவிவ் போலீஸ் செய்தி தொடர்பாளர் லூபா சாம்ரி கூறினார்.பாலஸ்தீனத்தில் காசா நகரில் கடந்த நவம்பர் மாதம் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் முதன்முறையாக தாக்குதல் நடைபெற்றதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.