சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்துள்ள உச்சநீதிமன்றம், அவரின் மேல்முறையீட்டு மனுவை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும், இதற்காக சிறப்பு அமர்வு ஒன்றை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு ஆணையிட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பு பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்திய நீதித்துறை வரலாற்றில் இதற்கு முன், இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. கடந்த காலத்தில் இதேபோன்ற கோரிக்கை ஜெயலலிதா தரப்பில் முன்வைக்கப்பட்டபோது, அதை உச்சநீதிமன்றம் நிராகரித்த வரலாறு உள்ளது. டான்சி வழக்கில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை விரைந்து முடிக்க ஆணையிட முடியாது என நீதிபதி எஸ்.பி.பரூச்சா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு கூறியது.
அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நிலுவையிலுள்ள கிரிமினல் வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கோரிக்கையை முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா மறுத்துவிட்டார். இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்?உச்சநீதிமன்றத்தில் காவிரி பிரச்னை, ராஜிவ்காந்தி கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை மட்டும் விரைந்து விசாரித்து முடிப்பதன் மூலம் நாட்டுக்கு என்ன நன்மை ஏற்பட்டுவிடப் போகிறது என்பது தான் தெரியவில்லை.
அரியானாவில் ஆசிரியர் நியமன ஊழலில் தண்டிக்கப்பட்ட அம்மாநில முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு 123 நாட்களுக்கு பிறகு தான் ஜாமீன் வழங்கப்பட்டது. கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் 75 நாட்களுக்கு பிறகே ஜாமீனில் விடுதலையாக முடிந்தது. ஜாமீன் விதிகளை மீறியதாகக் கூறி ஓம்பிரகாஷ் சவுதாலா மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். நீதித்துறையை அடுத்தடுத்து அவமதித்த ஜெயலலிதாவுக்கு நிபந்தனைகளே இல்லாமல் இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் கோரியவாறு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது ‘‘சட்டத்தின் முன் அனைவரும் சமம் தானா?’’ என்ற வினா சாமானியர் மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.