திருவாரூர்: காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதை தடுக்க டெல்டா விவசாயிகள் குழு வரும் 22ம் தேதி பிரதமரை சந்தித்து மனு கொடுக்கின்றனர்.காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் புதிதாக அணை கட்டுவது என கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதனால், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் நிலை உருவாகும். கர்நாடகாவின் முடிவுக்கு எதிராக டெல்டா விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். கர்நாடகா அணைகள் கட்டுவதை தடுக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர்பங்கீடு ஒழுங்காற்று குழுவையும் உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 200 விவசாயிகள் டெல்லி சென்று பாராளுமன்றம் முன் 3 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த வாக்குறுதியை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், காங்கிரஸ் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த விவசாய சங்கங்களின் பொறுப்பாளர்கள் கூட்டம் திருவாரூரில் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமை வகித்தார். இதில் நாகை மாவட்ட விவசாய சங்க செயலாளர் சம்பந்தம், மார்க்சிஸ்ட் விவசாய சங்க திருவாரூர் மாவட்ட துணைச்செயலாளர் தம்புசாமி, காங்கிரஸ் கட்சி விவசாய சங்க மாவட்ட பொதுச்செயலாளர் நெடுவை ராஜதுரை உட்பட பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கர்நாடக அரசு புதிய அணை கட்டும் திட்டத்தினை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தினையும், காவிரி நீர்பங்கீடு ஒழுங்காற்று குழுவினையும் உடனடியாக அமைக்க வேண்டும்.காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தைக் கைவிடவேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டெல்லியில் பிரதமரை சந்தித்து மனு அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.அதன்படி தமிழ்நாடு விவசாயிகள் சங்க(இந்திய கம்யூ. சார்பு) மாவட்ட செயலாளர் மாசிலாமணி, கரும்பு விவசாயிகள் சங்க(மார்க்சிஸ்ட்) மாவட்ட செயலாளர் தம்புசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மோகன், விவசாயிகள் நல சங்க திருவாரூர் மாவட்ட தலைவர் சேதுராமன் மற்றும் குமரேசன், காவிரி விவசாயிகள் சங்கம் மோகன்தாஸ் ஆகிய 6 பேரும் நேற்று திருவாரூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.பின்னர் அங்கு இருந்து நேற்று இரவு ரயில் மூலம் டெல்லிக்கு புறப்பட்டனர். இவர்கள் நாளை டெல்லி செல்கின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் ராஜா, திமுக எம்பி திருச்சி சிவா ஆகியோர் மூலம் 22ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கின்றனர்.அப்போது காவிரியில் கர்நாடகா அணை கட்டுவதை தடுக்க கோரி பிரதமரிடம் மனு கொடுத்து விட்டு திருவாரூர் திரும்புகின்றனர்.