பந்தலூர் அருகே 'பக்பக்' பஸ்சை மறித்து கண்ணாடியை நொறுக்கிய யானை
பந்தலூர்: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கூடலூர், நெலாக்கோட்டை வழியாக கரியசோலைக்கு நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டது. டிரைவர் ராமசாமி ஓட்ட கண்டக்டர் ஹக்கீம் பணியில் இருந்தார். 1 பயணி மட்டுமே பஸ்சில் இருந்தார்.இரவு 9 மணி அளவில் நெலாக்கோட்டை ராக்கூர் இடையே பஸ் சென்றது.அப்போது திடீரென வனத்துக்குள் இருந்து வெளியே வந்த ஒற்றை யானை பஸ்சை மறித்தது. டிரைவர் உடனடியாக நிறுத்தினார். பஸ்ஸை சுற்றி வந்த ஒற்றை யானை பின் பக்க கண்ணாடியை தும்பிக்கையால் தாக்கியது. இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அதன் பிறகும் நகர்ந்து செல்லாமல் ஒற்றை யானை நின்றது. இதனால் 'ஒற்றை'பயணியுடன் பஸ்சில் இருந்த டிரைவர், கண்டக்டர் பீதியின் பிடியில் சிக்கி இருந்தனர்.பின்னர் டிரைவர் ராமசாமி தொடர்ந்து ஹாரன் அடித்தார். ஹாரன் சத்தத்துக்குப் பயந்து போன யானை, வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து ஒற்றை பயணியுடன் அரசு பஸ் அங்கிருந்து கிளம்பியது.