தீபாவளியை முன்னிட்டு சினிமா தியேட்டர்களில் சிறப்பு காட்சி
சென்னை: தீபாவளியையொட்டி சினிமா தியேட்டர்களில் கூடுதல் காட்சிகள் நடத்திக் கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆர்.எம். அண்ணாமலை, பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழக அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இம்மாதம் 23, 24, 27, 28 ஆகிய தேதிகளில் அதிகப்படியாக ஒரு காட்சி அதாவது 5வது காட்சி நடத்திக் கொள்ள அனுமதி வழங்கி உள்ளது. மேலும் தீபாவளி பண்டிகை நாளான 22 மற்றும் 25, 26 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறையானதால் ஏற்கனவே உள்ள அரசு ஆணைப்படி அன்றைய தேதிகளில் காலை 9 மணிக்கு அதிகப்படியாக ஒரு காட்சி நடத்திக் கொள்ளலாம். அதாவது 5 காட்சிகள் நடத்திக்கொள்ளலாம்.அதுபோல நடமாடும் திரையரங்குகள் 22, 25, மற்றும் 26 ஆகிய தேதிகளில் காலை காட்சி 9 மணிக்கும், 23, 24, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மேட்னி காட்சி 2.30 மணிக்கும் நடத்திக் கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதிகப்படியான காட்சிகள் நடத்த இருப்பது பற்றி முன்கூட்டியே கலெக்டர் மற்றும் கேளிக்கை வரி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். காலை 9 மணி முதல் இரவு 1.30 மணி வரை மட்டுமே காட்சிகளை நடத்திக் கொள்ள வேண்டும்.