சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு வரும் 29ம்தேதி தொடங்குகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4ல் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 ஆகிய 2013-14ம் ஆண்டு பதவிகளுக்கான தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம்தேதி நடைபெற்றது.இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களுக்கான முறையே, நான்காம், மூன்றாம் மற்றும் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு வரும் 29ம்தேதி முதல் நவம்பர் 1ம்தேதி வரை நடைபெறுகிறது. அன்றைய தினங்களில் காலை 10மணி முதல் சான்றிதழ் சரிபார்ப்பும், காலை 8.30மணியிலிருந்து கலந்தாய்வும் நடைபெறும். இவை பிரேசர் பாலச் சாலை, வ.உ.சி நகர் (பிராட்வே பேருந்து நிலையம் அருகில்) சென்னை-3 என்ற முகவரியில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இது குறித்த விவரம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது மூலச் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பமிடப்பட்ட ஒளிமநகல் சான்றிதழ்கள் அனைத்தையும் கலந்தாய்வுக்கு வரும்போது தவறாமல் கொண்டு வர வேண்டும். மேலும் கம்ப்யூட்டர் வழி விண்ணப்பத்தில் 10-ம் வகுப்பு படிப்பை தமிழ் வழி மூலம் பயின்றுள்ளதாக உரிமம் கோரியுள்ள விண்ணப்பதாரர்கள் அவர்கள் பயின்ற பள்ளியின் முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர் அல்லது ஆசிரியையிடமிருந்து தமிழ் வழி மூலம்தான் பயின்றேன் என சான்றிதழ் பெற்று கண்டிப்பாக எடுத்துவர வேண்டும். இச்சான்றிதழ், அவர் விண்ணப்பிக்கும் போது, தமிழ் வழியில் பயின்றார் என குறிப்பிட்டிருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.