சுனந்தா மரணத்தில் மர்மம் நீடிப்பு : சிபிஐ விசாரணைக்கு குடும்பத்தினர் கோரிக்கை
புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச் சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சுனந்தாவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுடெல்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி கடந்த ஆண்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சசிதரூருக்கும், பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் மெகர் தரருக்கும் இடையே உறவு காணப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் சுனந்தாவின் மரணம் பல்வேறு சந்தேகங்களையும் கிளப்பியது.இந்நிலையில் சுனந்தா மரணம் குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சுனந்தாவின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அளவுக்கு அதிகமான மருந்துகளை உட்கொண்டதால் மரணம் நிகழ்ந்திருக்கலாம் என அப்போது தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அவரது உடலை மீண்டும் ஆய்வு செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில் சுனந்தாவின் மரணத்துக்கு விஷம் காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் சுனந்தாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சுனந்தாவின் உறவினர் அசோக் குமார் கூறுகையில், முந்தைய மருத்துவர்கள் அறிக்கையில் அதிகமான மருந்து உட்கொண்டதால் இறந்ததாக கூறப்பட்டது. தற்போது விஷத்தால் இறந்ததாக கூறுப்படுகிறது. எனவே அவரது மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்றார்.தற்போது இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.