தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு மத்திய அமைச்சருக்கு பிடிவாரன்ட்: நீதிமன்றம் அதிரடி
பிலிபித்: தேர்தல் விதிமுறை மீறல் வழக்கில் தொடர்ந்து ஆஜராக தவறிய மத்திய அமைச்சருக்கு நீதிமன்றம் பிணையில்லாத பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ அரசில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணை அமைச்சராக இருப்பவர் கல்ராஜ் மிஸ்ரா. கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இவர் மீது வழக்கு உள்ளது.இந்த வழக்கு தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பல முறை சம்மன் அனுப்பியும் கல்ராஜ் மிஸ்ரா ஆஜராகவில்லை. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி இந்த வழக்கில் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னரும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே அக்டோபர் 8ம் தேதிக்குள் அவர் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கல்ராஜ் மிஸ்ரா ஆஜராகவில்லை. இதனையடுத்து தற்போது அவருக்கு பிணையில் இல்லாத பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 22ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி பாஜ சார்பில் பிலிபித் தொகுதியில் போட்டியிட்ட வருண் காந்தியின் வகுப்புவாத வெறுப்பு பிரசாரம் காரணமாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழும்பின. இதில் வருண் காந்தி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அதே நேரத்தில் கல்ராஜ் மிஸ்ரா மீதும் தேர்தல் விதிமுறை மீறியதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.