சில்க் ஸ்மிதாவை தொடர்ந்து ஜோதிலட்சுமி வாழ்க்கை படமாகிறது
சென்னை: சில்க் ஸ்மிதாவை தொடர்ந்து ஜோதிலட்சுமி வாழ்க்கை படமாகிறது. 1960-70களில் எம்.ஜி.ஆரின் ‘பெரிய இடத்துப் பெண், ‘ரிக்ஷாகாரன் மற்றும் தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஜோதி லட்சுமி. இப்போது அம்மா வேடங்களில் அவ்வப்போது தலைகாட்டுகிறார். இவரது தங்கை ஜெயமாலினி. ‘ஜெகன்மோகினி படத்தின் மூலம் பிரபலம் ஆனார். நடிகைகளின் வாழ்க்கையை மையமாக வைத்து படங்கள் வருகிறது. சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து ‘ஒரு நடிகையின் வாக்குமூலம் என தமிழிலும், ‘டர்ட்டி பிக்சர்ஸ் என இந்தியிலும் மற்றும் கன்னடம், மலையாளத்திலும் படங்கள் வெளியானது. இதில் இந்தி, கன்னட படங்கள் ஹிட் ஆகின. சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க சில்க் ஸ்மிதா எவ்வாறு கஷ்டப்பட்டார் என்பதை சொல்லும் கதையாக மராட்டிய மொழியில் புதிய படத்தை இயக்க உள்ளார் ஷமீர் கான் என்ற இயக்குனர்.அந்த பாணியில் ஜோதி லட்சுமி வாழ்க்கை கதையும் படமாக உள்ளது. இப்படத்தை புரி ஜெகந்நாத் இயக்குகிறார். இதில் சார்மி நடிக்கிறார். படத்துக்கு ஜோதிலட்சுமி என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜோதிலட்சுமி வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகிறதா என்று இயக்குனர் தரப்பில் விசாரித்தபோது அதுபற்றி சரியான நேரத்தில் இயக்குனர் பதில் அளிப்பார் என்றனர்.