மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ஒரு கிலோ தங்கம் பறிமுதல்
மீனம்பாக்கம்: சென்னைக்கு நேற்று நள்ளிரவு 11.50 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது மியான்மர் நாட்டை சேர்ந்த ஹவாய்தூ (32) என்பவர் சுற்றுலா பயணியாக சென்னைக்கு வந்தார். அவரை அதிகாரிகள் சோதனையிட்டனர். உடல் நிலை சரியில்லை, கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது, சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என அவசரப்படுத்தினார். இது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியது. உடனே விமான மருத்துவமனைக்கு அழைத்து சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். சிறிய சிறிய உருண்டைகள் இருப்பது தெரிந்தது.அதுபற்றி விசாரித்தபோது தங்கத்தை தூளாக்கி மாத்திரை போல் உருட்டி விழுங்கியதாக கூறினார். இதையடுத்து அவருக்கு இனிமா கொடுத்து 7 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மாத்திரைகளை வெளியே எடுத்தனர். மொத்தம் 124 தங்க மாத்திரைகள் எடுக்கப்பட்டன. மொத்த எடை 1 கிலோ. சர்வதேச மதிப்பு ரூ.30 லட்சம். இதையடுத்து அவரை கைது செய்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் ஏர்போர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.