பெட்ரோல் விலை 68 காசு குறைப்பு டீசல் விலை குறையுமா? நாளை அறிவிப்பு வெளியாகும் அதிகாரிகள் தகவல்
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 54 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. டீசல் விலையை குறைப்பது குறித்து பிரதமர் மோடி, நாடு திரும்பிய பின் முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. இதையடுத்து, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 54 காசுகள் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்துள்ளன. உள்ளூர் வரிகளையும் சேர்த்து கணக்கிடும் போது டெல்லியில் 65 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.67.86 ஆக விற்கப்படுகிறது. மும்பையில் 68 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.75.73க்கு விற்கப்படுகிறது. சென்னையில் லிட்டர் விலை ரூ.71.55ல் இருந்து 68 காசுகள் குறைந்து ரூ.70.87க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.1.50 குறைத்தன. மானியமில்லாத சமையல் காஸ் சிலிண்டர் விலையும் ரூ.21 வரை குறைக்கப்பட்டது.
டீசல் விலையை பொறுத்த அளவில் கடந்த 2009ம் ஆண்டு குறைக்கப்பட்டது. பின்னர், மாதம் 50 காசுகள் உயர்த்துவது என்ற மத்திய அரசின் கொள்கையின்படி டீசல் விலை மாதாமாதம் உயர்த்தப்பட்டு வந்தது. தற்போது, சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப டீசல் விலையையும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 16ம் தேதி டீசல் விலை லிட்டருக்கு 35 பைசா குறைக்கப்பட்டது. தற்போது ரூ.1 வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஏற்கனவே பிரதமர் மோடிக்கு மத்திய எண்ணெய் வளத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளதால், பிரதமர் மோடி நாடு திரும்பியதும் டீசல் விலை குறைப்பு குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது.மேலும் மகாராஷ்டிரா, அரியானாவில் சட்டபேரவை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் ஆணையத்தின் கருத்தையும் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை குறைப்பு நேற்று இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.