மதுபாட்டிலில் பல்லி: குடிமகன்கள் கிலி
கம்பம்: கம்பம் டாஸ்மாக் கடையில் வாங்கிய குவார்ட்டர் மது பாட்டிலில் கிடந்த பல்லியை கண்ட குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் எட்டுக்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் உள்ளன. புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் நேற்று காலை சரக்கு வாங்க வந்த நபர் ரூ.90க்கு குவார்ட்டர் பாட்டில் வாங்கியுள்ளளார். வாங்கிய பின் அருகே உள்ள பாருக்கு சென்று பாட்டிலை திறந்து பார்த்தபோது, அடிப்பகுதியில் தூசு போன்று கட்டியாக இருந்துள்ளது.
கூர்ந்து கவனித்த போது சிறு பல்லி ஒன்று இறந்து சிதைந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. உடனே விற்பனையாளரிடம் முறையிட்டு மற்றொரு பாட்டிலை வாங்கி சென்றார். இதனால் அந்தக் கடையில் ‘சரக்கு‘ வாங்கியவர் உட்பட மற்ற ‘குடிமகன்‘களும் கிலி அடைந்தனர். ‘நல்ல போதையில் இதை கவனிக்காமல் குடித்திருந்தால் என்ன ஆயிருக்கும்‘ என புலம்ப தொடங்கி விட்டனர்.