அங்காரா: சிரியாவில் கடந்த 3 மாதங்களுக்கு முன் ஐஎஸ் தீவிரவாதிகள் சிறைபிடித்த 49 துருக்கி பிணை கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அனைவரும் நேற்று பத்திரமாக துருக்கி வந்து சேர்ந்ததாக அந்நாட்டு பிரதமர் அகமத் தாவூது தெரிவித்தார். ஈராக்கின் மொசூல் நகரில் துருக்கியின் தூதரகம் இயங்கி வருகிறது. இந்த தூதரகத்தில் பணியாற்றிய 49 துருக்கி ஊழியர்களை கடந்த 3 மாதங்களுக்கு முன் ஐஎஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக சிறைபிடித்தனர். இதற்கிடையில், ஈராக் மீதான அமெரிக்க வான்வழி தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தாங்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த 2 அமெரிக்க பத்திரிகையாளர்கள் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஒருவரை ஐஎஸ் தீவிரவாதிகள் கழுத்து அறுத்து கொன்றனர். இந்நிலையில், ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் கலந்து கொள்ள துருக்கிக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அழைப்பு விடுத்தன.
எனினும், ஐஎஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்திருக்கும் 49 பேரை கருத்தில் கொண்டு துருக்கி அமைதி காத்தது. இந்நிலையில், துருக்கி தூதர் ஓஸ்துர்க் யேல்மாஸ் மற்றும் தூதரக ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் என 49 பேரை நேற்று காலை துருக்கி எல்லையில் உள்ள சான்லியுர்பாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் விடுவித்தனர். துருக்கி பிரதமர் அகமத் தாவூது விமானத்தில் நேரடியாக சென்று, தன்னுடன் அங்காராவுக்கு அழைத்து வந்தார்.