மதுரை: மதுரையில் ரவுடிகளுக்கு இடையே நடந்த தொடர் மோதலால் தங்கள் தரப்பை கொல்லும் முன்பு 3 பேரை வெட்டிக்கொன்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.மதுரை மீனாம்பிகை நகர் 8வது தெருவை சேர்ந்தவர் இருளாயி(50). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது மகன்கள் பாம்பு நாகராஜா(19), கருப்பு ராஜா(21) மற்றும் நண்பர் கார்த்திக் ஆகியோர் நேற்று வீட்டில் இருந்தபோது, 10 பேர் கும்பலால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. கொலை செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரும் பிரபல ரவுடி ‘அப்பள ராஜாவின் கூட்டாளிகள். மதுரையின் பிரபல ரவுடியான ‘டாக் ரவியின் கூட்டாளிகள் ‘அப்பள ராஜா, ‘கவாத்து திருப்பதி. ரவி சென்னைக்கு சென்றுவிட்டதையடுத்து மதுரையில் கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ராஜாவும், திருப்பதியும் ஈடுபட்டு வந்தனர். இதில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், இரு கோஷ்டிகளாக பிரிந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ‘கவாத்து திருப்பதியின் கூட்டாளி சவுந்தரை, ‘அப்பள ராஜாவின் கூட்டாளி பாம்பு நாகராஜா உள்ளிட்டோர் வெட்டினர். இதில் சவுந்தர் உயிர் தப்பினார். இதற்கிடையே ‘அப்பள ராஜா கொலை வழக்கு ஒன்றில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சவுந்தரை வெட்டியதற்காக பாம்பு நாகராஜாவை கொலை செய்ய ‘கவாத்து திருப்பதியின் ஆட்கள் திட்டமிட்டனர். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த பாம்பு நாகராஜா, தனது சகோதரர் கருப்பு ராஜாவுடன் கோவைக்கு சென்றுவிட்டார். இதற்கிடையே, வேலூர் சிறையில் உள்ள அப்பள ராஜா, கவாத்து திருப்பதி உங்களை கொல்லும் முன்பு அவர்களை கொன்றுவிடுமாறு பாம்பு நாகராஜாவிற்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் சகோதரர்கள் இருவரும் நேற்று மதுரைக்கு வந்தனர். ஏற்கனவே இருவரையும் கொலை செய்ய திட்டமிருந்த கவாத்து திருப்பதி தரப்பினருக்கு இது குறித்த தகவல் தெரிய வந்தது. இதையடுத்து, கவாத்து திருப்பதி, அவரது சகோதரர் குண்டுமணி, சவுந்தர் உள்ளிட்டோர் நெல்லையை சேர்ந்த கூலிப்படையின் உதவியுடன், சகோதரர்கள் இருவரையும் வீடு புகுந்து வெட்டிகொலை செய்தனர். இதில் அவர்களுடன் இருந்த கார்த்திக்கும் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக திருப்பதி, அவரது சகோதரர் குண்டுமணி, சவுந்தர் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நெல்லை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குற்றவாளிகளை தேடி விரைந்துள்ள தனிப்படை மதுரையிலும் அவர்களை வலைவீசி தேடி வருகிறது. விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே குற்றவாளிகள் கோர்ட்டில் சரணடைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.