அதிராம்பட்டினம்:தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், மறவக்காடு ஆகிய பகுதிகளிலிருந்து மீனவர்கள் பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர். மீன்கள், நண்டுகள், இறால்கள் பிடிப்பதற்கு விரிக்கும் வலையில் சங்குகளும் பிடிபடுகிறது. சங்குகளில் பால், குளிர், வலம்புரி, ஐவிரல், மொழுக்கை, வெள்ளை முள்ளி, கோவை, கோம்பை, காரம் என பலவகைகள் உள்ளன. அதிராம்பட்டினம் கடல் பகுதியில் பால், வெள்ளை முள்ளி, கோவை, கோம்பை, கார சங்குகள் உள்ளன. இவற்றில் பால், வெள்ளை முள்ளி சங்குகள்தான் அதிகளவில் பிடிபடுகிறது. இவ்வாறு கிடைக்கும் சங்குகளில் கறியை தனியாக எடுத்து மீனவர்கள் விற்பனை செய்வர். சங்கு கறி ஒரு கிலோ ரூ.ஆயிரம் வரை விலை போகும். மருத்துவ குணம் உள்ளதால் சித்த வைத்தியர்கள், வியாபாரிகள் முன்பதிவு செய்து சங்கு கறியை வாங்கிச் செல்கின்றனர். கறியை எடுத்தபின் மீனவர்கள் சங்குகளை சேகரித்து வைக்கின்றனர். அவற்றை வியாபாரிகள் விலை கொடுத்து வாங்கி கீழக்கரை, ராமேஸ்வரம் பகுதிக்கு அனுப்பி வைக்கின்றனர். சங்குகளில் இருந்து பலவிதமான அழகு பொருட்கள் செய்து விற்கப்பட்டு வருகிறது. தற்போது அதிகளவு சங்குகள் சிக்குவதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்மீனவர்கள் கூறுகையில், ‘அதிராம்பட்டினம் கடல் பகுதியில் வெள்ளை முள்ளி சங்கு அதிக அளவில் அகப்படுகிறது. ஒரு வலையில் 5 சங்குகளிலிருந்து 10 சங்கு வரை கிடைக்கிறது. பால்சங்கும் அகப்படுகிறது. சங்குகறி மூல சூட்டுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. அதிக சுவையுடையது. தரத்திற்கேற்ப சங்குகளை வியாபாரிகள் விலை கொடுத்து வாங்குகின்றனர்‘ என்றனர்.