தண்டையார்பேட்டையில் நள்ளிரவில் மின்வாரிய ஆபீஸ் முற்றுகை; மறியல்
தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் நள்ளிரவில் மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தண்டையார்பேட்டை துர்கா தேவி நகரில் தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம் மற்றும் மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து தண்டையார்பேட்டை நேதாஜி நகர், கருணாநிதி நகர், துர்கா தேவி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக இப்பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் மின் தடை ஏற்பட்டதால் தொலைபேசி மூலம் பொதுமக்கள் புகார் செய்ய முற்பட்டனர். ஆனால் தொலைபேசியை யாரும் எடுக்கவில்லை. செல்போனை தொடர்பு கொண்டபோதும் முடியாததால் நள்ளிரவு 1.30 மணியளவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மின்வாரிய அலுவலகம் முன்பு திரண்டனர். அங்கு ஊழியர்கள் இல்லாததால் ஆத்திரத்தில் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். பின்னர் எண்ணூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஆர்.கே.நகர் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் சமரசம் பேசினர். இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.