அமெரிக்க கண்காட்சியில் அரிய வகை நீலநிற வைரக்கல்-ரூ15 ஆயிரம் கோடி மதிப்புடையது
லாஸ்ஏஞ்சல்ஸ்,-உலகில் பல்வேறு குறைபாடுகளுடன் ஏராளமான வைரக் கற்கள் பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன. எவ்வித குறைபாடும் இல்லாமல் 12 கேரட் அரிய வகை நீலநிற வைரக்கல் ஒன்று, அமெரிக்காவில் கண்காட்சியில் நேற்று மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. தென் ஆப்ரிக்காவின் வைர சுரங்கத்தில் 12 கேரட் கொண்ட அரிய வகை புளுமூன் வைரக்கல் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோரா இன்டர்நேஷனல் என்ற வைர வியாபார நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.15 ஆயிரம் கோடி விலை கொடுத்து வாங்கியது.கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் வைரக் கற்கள் விற்பனை கண்காட்சியை கோரா இன்டர்நேஷனல் நேற்று துவக்கியது. இங்கு அரிய வகை புளு மூன் வைரக்கல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நடைபெறுகிறது. ஏற்கனவே நீலநிறம் கொண்ட ஏராளமான வைரக் கற்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. ஆனால், எவ்வித குறைபாடும் இல்லாமல் தூய நீலநிறத்தில் நிலவைப் போல் காட்சியளிக்கும் வைரக்கல் இப்போதுதான் வந்துள்ளது. வைரக்கற்களை பல ஆண்டுகளாக கையாளும் நானே, இப்போதுதான் முதல்முறையாக இது போன்ற வைரக்கல்லை பார்க்கிறேன் என்று அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி சூசாட்டே கோம்ஸ் கூறினார்.
லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வரலாற்று மியூசியத்தில் துவங்கியுள்ள வைர கண்காட்சியில் வைக்கப்பட்ட புளுமூன் வைரக்கல்லை புவியியல் மற்றும் கனிமவள அறிஞர்களும் ஆய்வு செய்கின்றனர். இந்த வைரக்கல் போரான் என்று அழைக்கப்படுகிறது. இவை பூமிக்கு அடியில் 145 கி.மீ. ஆழத்தில் கிடைக்கும் அரிய வகை கற்களாகும். இவை பூமிக்கு அடியில் எப்போதாவது ஒருமுறைதான் அரிதாக கிடைக்கும் என்று கனிமவள அறிஞர் எலியாஸ் கலிலிலோ கூறுகிறார்.