அசுரர்களையும், அவர்களின் தலைவன் சூரபதுமனையும் வதம் செய்து சினம் தணிந்து வீற்றிருப்பதால், இத்தலத்திற்கு தணிகை என பெயர் வந்தது. முருகப்பெருமான், ஞானவேல் பெற்றதன் மூலம் ஞானசக்தியும், தெய்வயானையை மணம் புரிந்து கிரியா சக்தியும், வள்ளி மலையில் வேடுவ அரசன் நம்பி அரசனால் வளர்க்கப்பட்ட வள்ளியை வலிந்து சென்று திருவிளையாடல் புரிந்து தமிழ் இலக்கண முறைப்படி திருமணம் செய்து கொண்டதால் இச்சாசக்தியும் பெற்றார். முருகனுக்கு ஞானசக்தி, கிரியாசக்தி, இச்சா சக்தி ஆகிய முழுமை குணம் நிறைந்த வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிப்பதே திருத்தணியின் சிறப்பாகும். திருதணிகை மலையின் வடக்கே உள்ள மலை வெண்ணிறமாக உள்ளதால் பச்சரிசி மலை என்றும், தெற்கே உள்ள மலை கருநிறத்துடன் உள்ளதால் பிண்ணாக்கு மலை என்றும் கூறப்படுகிறது.
ஆண்டின் 365 நாட்களை குறிக்கும் விதமாக 365 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் அபராஜிதவர்மன்(கிபி 875-893) எனும் பல்லவ மன்னனின் கல்வெட்டும், பராந்தகச்சோழன்(கிபி 907-953) காலத்து கல்வெட்டும் காணப்படுகிறது. மலைக்கோயில் கட்டிடகலையானது சாளுக்கியர் காலக்கட்டிடக்கலையை சார்ந்தது. 16 சைவகோயில்களும், 4 சக்தி திருதலங்கள், 6 வைணவ கோயில்கள், 1 மடாலயம் என மொத்தம் 27 கோயில்கள் இதனுடன் இணைந்த உப கோயில்களாகும்.
தமிழில் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்திலும், சங்க இலக்கிய நூல் திருமுருகாற்று படையிலும் முருகப்பெருமான் புகழை சிறப்பாக குறிப்பிட்டுள்ளனர். தமிழ்கடவுள் முருகன் என்பதை கடைச்சங்க தலைவராக திகழ்ந்த புலவர் நக்கீரர் தனது பாடலில் அழகாக எழுதியுள்ளார். அருணகிரிநாதர் இயற்றிய 64 திருப்புகழ் பாடல்களில் திருத்தணி முருகன் பெருமைகள் குறித்து விளக்கியுள்ளார். முருகன் தலங்களில் ஐந்தாம் படையான குன்று தோராடல் என்னும் திருத்தணியே சிறந்த திருத்தலமாக விளங்குகிறது என்றால் மிகையாகாது.