கமல் பட டைட்டில்: தனுஷுக்கு சிக்கல்
சென்னை: கமல்ஹாசன் பட தலைப்பு கிடைப்பதில் தனுஷ் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.கமல்ஹாசன், அம்பிகா நடிப்பில் பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படம் காக்கி சட்டை. சத்யா மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இப்போது தனுஷ் தயாரிக்கும் புது படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இதில் அவருக்கு போலீஸ் அதிகாரி வேடம். எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்குகிறார். இந்த படத்தின் கதைக்கு காக்கி சட்டை தலைப்பு பொருத்தமாக இருக்கும் என டைரக்டர் துரை செந்தில்குமாரும் தனுஷும் கருதினர். இதையடுத்து முறைப்படி அனுமதி வாங்கி, தங்கள் படத்துக்கு காக்கி சட்டை என பெயர் வைக்க யோசித்திருந்தனர்.
கமல்ஹாசன் தரப்பில் படத்துக்கு தலைப்பை விட்டுத் தருவதில் எந்த பிரச்சினையும் இல்லையாம். ஆனால் சத்யா மூவிஸ் நிறுவனத்தார் அந்த தலைப்பை விட்டுத் தர விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் தனுஷ் படக்குழுவினர் கவலை அடைந்தனர். இந்நிலையில் படத்துக்கு வேறு தலைப்பை யோசித்து வருகின்றனர்.இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளியான காவலன் படத்துக்கு காவல்காரன் என்ற தலைப்பை வைக்க அனுமதி கேட்டபோதும் சத்யா மூவிஸ் நிறுவனத்தார் அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.