சொந்த நாட்டில் 230 விக்கெட்டுகள் ஆண்டர்சன் புதிய சாதனை
இந்திய பேட்ஸ்மேன் ரவீந்திர ஜடேஜாவுடன் மோதலில் ஈடுபட்டு சர்ச்சைக்குள்ளாகி உள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், 230 விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 229 விக்கெட்டுகளை கைப்பற்றி சொந்த நாட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர் என்ற இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் ட்ரூமேனின் சாதனையை ஆண்டர்சன் நேற்று முறியடித்தார். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயான் போத்தம் 226 விக்கெட்டுகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய ஓபனிங் பேட்ஸ் மேன் ஷிகர் தவானின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனையை ஆண்டர்சன் நிகழ்த்தினார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விளையாடிய வகையில் ஒட்டுமொத்தமாக 95 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன், 359 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.