அர்ஜென்டினாவின் தோல்வியால் மகிழ்ந்த பிரேசில் ரசிகர்கள்
கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி, இரு அணிகளுக்கு இடையிலான போட்டியாகப் பார்க்கப்படாமல் இரு எதிரி நாடுகளுக்கு இடையிலான போட்டியாகப் பார்க்கப்படுவது போன்று, கால்பந்து விளையாட்டைப் பொருத்தவரை அர்ஜென்டினா- பிரேசில் எதிரி நாடுகளாக திகழ்கின்றன. பிரேசில் அணி அரையிறுதியில் தோல்வி கண்ட போது, அர்ஜென்டினாவில் இந்த தோல்வியை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இது போன்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி, ஜெர்மனியிடம் தோல்வி கண்டது.
தங்களது நாடு அரையிறுதியில் தோல்வி கண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்த பிரேசில் ரசிகர்கள், அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டியில் தோல்வி கண்டதால் மகிழ்ச்சி அடைந்தனர். தங்களது எதிரி அணி தோல்வி கண்டதால், பிரேசில் நாட்டில் ரசிகர்கள் மகிழ்ச்சிகடலில் திளைக்கின்றனர். ரியோடி ஜெனீரோ நகரில் ‘பப்’களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அங்கெல்லாம், பிரேசிலின் அரையிறுதி தோல்வியைக் காட்டிலும், அர்ஜென்டினாவில் இறுதிப்போட்டி தோல்வியால் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கே அதிக அளவில் காணப்படுகிறது. குடிபோதையில் ‘அழு அர்ஜென்டினா’ என்று பிரேசில் ரசிகர்கள் கூச்சலிட்டு மகிழ்கின்றனர். பிரேசில் ரசிகர்களின் இத்தகைய மனப்பான்மை அர்ஜென்டினா ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.