போர்டலிசா:பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை நேற்றிரவு சந்தித்து பேசினார். அணுசக்தி, ராணுவம் உள்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் கூட்டாக செயல்படுவது குறித்து அப்போது விவாதித்தார். மேலும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை பார்வையிட வருமாறு புடினுக்கு மோடி அழைப்பு விடுத்தார். இதை ஏற்ற புடின், வரும் டிசம்பரில் கூடங்குளத்திற்கு வருகிறார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகள் இணைந்து பிரிக்ஸ் என்ற கூட்டமைப்பை நடத்தி வருகின்றன. இந்த கூட்டமைப்பின் மாநாடு பிரேசில் நாட்டில் போர்டலிசா நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புடின், பிரேசில் அதிபர் தில்மா ரவுசப், சீன அதிபர் ஜின்பிங், தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில், சீனாவின் ஷாங்காய் நகரில் புதிதாக பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. மாநாட்டு நிகழ்ச்சிகள் முடிந்ததும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, நரேந்திர மோடி நேற்றிரவு சந்தித்து பேசினார். இருவரும் சுமார் 40 நிமிடங்கள் பேசினர். தேர்தலில் அமோக வெற்றி பெற்று பிரதமரானதற்காக மோடிக்கு புடின் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, புடினிடம் மோடி கூறியதாவது:
இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இது வரை ரஷ்யாவுடன் நல்லுறவு வைத்திருக்கிறது. மேலும், இந்தியாவின் சிக்கலான நேரங்களில் ரஷ்யா உதவியிருக்கிறது. இந்தியாவின் சிறந்த நண்பர் யார் என்று இந்தியாவில் உள்ள சின்னக் குழந்தையிடம் கேட்டால் கூட, ‘ரஷ்யா’ என்றுதான் பதிலளிக்கும். அணுசக்தி, ராணுவம், மின்சார உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம். அதே போல், விசா விதிகளை ரஷ்யா தளர்த்த வேண்டும். குறிப்பாக, உயர் கல்வி கற்க வரும் மாணவர்களுக்காக விசா விதிகளை தளர்வு செய்ய வேண்டும். வரும் டிசம்பரில் இந்தியாவுக்கு நீங்கள் வரும் போது, டெல்லியைத் தவிர மற்ற நகரங்களுக்கும் சென்று பார்க்க வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வந்து பார்வையிட வேண்டும். இவ்வாறு மோடி கூறினார்.
அணுசக்தி உள்பட பல்வேறு துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும், மாணவர்களுக்கான விசா விதிகளை தளர்வு செய்வது பற்றி பரிசீலிப்பதாகவும் புடின் தெரிவித்தார். மேலும், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வருவதாக கூறிய அவர், கூடங்குளம் 2வது அணு உலை திட்டம் பற்றியும் குறிப்பிட்டார். புடினுடன் மோடி, இந்தியில் பேசினார். அவரது பேச்சை அதிகாரிகள் மொழி பெயர்த்தனர்.