சென்னை: சென்னையில் முக்கிய தொழிலதிபரை கடத்தி படுகொலை செய்ய திட்டம் தீட்டிய 5 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி தனிப்படை போலீசார் சென்னை முழுவதும் பதுங்கி உள்ள தலைமறைவு ரவுடிகளை கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் ரகசிய தகவலின் பேரில் பிரபல ரவுடிகளான கோவையை சேர்ந்த தனஞ்செயன் (26), சார்லஸ் (35), யுவராஜ்(36), சுரேஷ் (எ) நாலு (29), புஷ்பா (எ) புஷ்பாகரன் (34) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னையில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் என தெரியவந்தது.
தனஞ்செயன் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த அப்துல்கபார் என்பவரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதும், அதேபோல், சார்லஸ் கடந்த 2012ம் ஆண்டு ராயபுரத்தை சேர்ந்த பிரான்சிஸ் என்பவரை கொலை செய்ததும். சுரேஷ் கடந்த 2013ம் ஆண்டு செங்கல்பட்டு ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் விஜயகுமாரை கொலை செய்து பின்னர் தலைலமறைவு ஆனதும் தெரியவந்தது.மேலும், புஷ்பா(எ) புஷ்பாகரன் 2013ம் ஆண்டு வியாசர்பாடியை சேர்ந்த சதீஷ் மற்றும் மகாகவி பாரதியார் நகர் காமேஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது. இந்த 5 ரவுடிகளும் கூட்டாக இணைந்து சென்னையில் முக்கிய தொழிலதிபரை கடத்தி கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்து.இதையடுத்து அந்த தொழிலதிபர் யார் என்பது குறித்து போலீசார், பிடிபட்ட 5 பேரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.