பெரம்பலூர்: பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகன் அன்புமுத்து (38). நகராட்சி 11வது வார்டு திமுக கவுன்சிலர். பெரம்பலூர் துறைமங்கலம் பள்ளிவாசல் தெரு 6வது குறுக்கு சந்தை சேர்ந்தவர் மயில்சாமி (42). எலக்ட்ரீசியன். இவரது மனைவி தீபா (38), 8வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்தார். 2 மகன்கள் உள்ளனர்.அன்புமுத்துவுக்கும், தீபாவுக்கும் கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த மயில்சாமி மனைவியை கண்டித்தார். இருந்தும் அவர்களுக்கு இடையே கள்ளத்தொடர்பு நீடித்தது. இதனால் மயில்சாமி, மனைவியை பிரிந்து துறைமங்கலம் 3 ரோட்டில் வாடகை வீடு எடுத்து, எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். மேலும் விவாகரத்து கேட்டு கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளார். மயில்சாமியின் 2 மகன்களும், அருகில் வசிக்கும் பாட்டி(தீபாவின் அம்மா) வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தனர். இதனால் வீட்டில் தீபா மட்டும் தனியாக வசித்து வந்தார். அவரது வீட்டுக்கு அன்புமுத்து அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.
நேற்று மாலை 3 மணியளவில் தீபா வீட்டு வராண்டாவில் அன்புமுத்து சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று பார்த்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பெட்ரூம் கதவு மட்டும் உள்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டு இருந்தது. கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்கவில்லை. இதனால் போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு மின்விசிறியில் தீபா, தான் அணிந்திருந்த சேலையால் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.இதையடுத்து இருவரின் சடலங்களையும் போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் இருந்த அன்புமுத்து, தீபா ஆகியோரின் செல்போன்கள், பைக்குகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
கள்ளத்தொடர்பு தகராறில் அன்புமுத்துவை மயில்சாமி வெட்டிக் கொலை செய்திருக்கலாம். மனமுடைந்த தீபா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.இதையடுத்து, மயில்சாமியின் வீட்டுக்கு போலீசார் சென்ற போது, வீடு பூட்டப்பட்டிருந்தது. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் தலைமறைவாகிவிட்டதால் அவரோ அல்லது அவரால் அனுப்பப்பட்ட கூலிப்படையினரோ அன்புமுத்துவை வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து மயில்சாமியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.