அழகுமுத்துகோனுக்கு மணிமண்டபம் : ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி எழும்பூரில் உள்ள அவரது உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாமக சார்பில் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதைத் தொடர்ந்து ராமதாஸ் நிருபர்களிடம் கூறியது:முதல் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற வீரர் அழகுமுத்துகோன், தூத்துக்குடி மாவட்டம் காட்டாங்குளமேட்டில் நடந்த போரின்போது உயிர் துறந்தார். அவர் உயிர் நீத்த இடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும், இது அவர் சார்ந்த சமுதாய மக்களின் கோரிக்கையாக மட்டுமல்ல, தமிழக மக்களின் ஒட்டுமொத்த வேண்டுகோளாகும். தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.