அமெரிக்காவில் சர்ச்சை வெள்ளை சட்டைக்காரருக்கு மது கொடுக்க முடியாது: பாரில் வினோத அறிவிப்பு
மின்னபோலிஸ்: அமெரிக்காவில் உள்ள ஒரு மதுபான பாரில் வெள்ளை சட்டை போட்டு வருபவர்களுக்கு மது விற்க மாட்டோம் என்று அறிவிப்பு வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹென்னிபின் கவுன்டி என்ற பகுதியில் அமைந்துள்ள நகரம் மின்னபோலிஸ். இங்குள்ள மதுபான பாரில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அந்த பார் உரிமையாளர் வெளியிட்டுள்ள வினோதமான அறிவிப்புகள் குடி மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பாரில் குடிக்க செல்பவர்கள் எந்த மாதிரியான உடைகளை அணிந்து வர வேண்டும் என்ற விதிமுறைகளை அறிவித்து பாருக்கு வெளியே போர்டு வைத்திருக்கின்றனர்.
அதில், நீளமான வெள்ளை டீ சர்ட், சட்டைக்கு வெளியே கழுத்து சங்கிலிகளை அணிந்து வருவது, விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகள், தொள,தொள ஆடைகள் அணிந்து வருவது எல்லாம் கூடாது. அப்படி அணிந்து வருபவர்களுக்கு மது சப்ளை செய்ய முடியாது என அந்த பாரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்று விதிக்கப்படும் ஆடைக் கட்டுப்பாடுகள் அனைத்தும் மறைமுகமாக கறுப்பர் இன மக்களை, பாருக்குள் வர விடாமல் தடுப்பதற்காக இன வெறுப்புடன் விதிக்கப்படுவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆனால், பார் உரிமையாளர்கள் இதை மறுத்து, வன்முறைகள் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இந்த கட்டுப்பாடுகளை விதிப்பதாக கூறுகின்றனர்.