தர்மபுரி:தர்மபுரி அருகே மாமனார் வீட்டுக்கு விருந்துக்கு வந்த புதுமாப்பிள்ளை படுகொலை செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள ராஜாகொல்லஅள்ளியை சேர்ந்தவர் மாது. இவரது மகள்கள் தேன்மொழி மற்றும் செல்லக்கிளி. தேன்மொழிக்கும், லாரி டிரைவர் மாரிமுத்துவுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் மாதுவின் 2வது மகள் செல்லக்கிளியை, தீவட்டிப்பட்டி அருகே உள்ள கோணம்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் (24) என்பவருக்கு 5 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொடுத்தனர். சீனிவாசன் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். திருமணத்துக்கு முன்பே சீனிவாசனுக்கும், மாரிமுத்துவின் மனைவி தேன்மொழிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மாரிமுத்து தனது மனைவி தேன்மொழியை கண்டித்து வந்துள்ளார். மேலும் சீனிவாசனுக்கும் மாரிமுத்துவுக்கும் நிலத்தகராறும் இருந்து வந்துள்ளது.இந்நிலையில், ராஜாகொல்லஅள்ளியில் நடந்து வரும் மாரியம்மன் கோயில் திருவிழாவுக்காக புதுமாப்பிள்ளை சீனிவாசன், மனைவி செல்லக்கிளியுடன் மாமனார் வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்தார். இதேபோல் மாரிமுத்துவும், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்துள்ளார்.
நேற்றிரவு 11 மணியளவில் தனது மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடும்படி சீனிவாசனிடம் மாரிமுத்து கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சீனிவாசனை மாரிமுத்து சரமாரி குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த சீனிவாசன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதனிடையே சீனிவாசன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்ததும் வீட்டில் இருந்து தப்பியோடிய மாரிமுத்து, இன்று அதிகாலை இண்டூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.