பெனாலிடி ஷூட்டில் நெதர் லாந்து வீரர்கள் உதைத்த 2 பந்துகளை கோலாகாமல் தடுத்த கோல் கீப்பர் செர்ஜியோ ரொமேரோவின் சாகசத்தால் 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று 24 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் உலக கோப்பை பைனலுக்குள் நுழைந்தது அர்ஜென்டினா.உலக கோப்பை 2வது அரையிறுதிப்போட்டி சா போலோ நகரில் உள்ள இடேகுரா ஸ்டேடியத்தில் நேற்று நள்ளிரவு நடந்தது. இதில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள அர்ஜென்டினா அணி, நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இருந்த நெதர்லாந்துடன் மோதியது. முதல் போட்டியில் ஜெர்மனி அணி 7-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை நசுங்கி வெளியேற்றிய நிலையில், நேற்றிரவு நடந்த போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், ஆட்டத்தின் 90 நிமிடங்கள் மற்றும் கூடுதல் நேரமான 30 நிமிடங்கள் ஆகியவற்றில் இரு அணிகளும் பெரும் போராட்டம் நடத்தியும் கோல் அடிக்க முடியவில்லை.
அர்ஜென்டினாவின் தடுப்பு கள வீரர்கள் சிறப்பாக விளையாடி நெதர்லாந்து வீரர்களின் முன்னேற்றத்தை தடுத்தனர். இதனால், ஆட்டம் டை பிரேக்கருக்குச் சென் றது. பெனாலிடி ஷூட் முறையில் கோல் அடிக்க இரு அணி வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர்.கோஸ்டாரிகாவுக்கு எதிரான காலிறுதிப்போட்டியின் போது நெதர்லாந்து அணியின் கோச் வான் கால், கடைசி நிமிடத்தில் தங்களது வழக்கமான கோல் கீப்பர் சிலெஸ்செனை மாற்றிவிட்டு, குரூலை அனுப்பினார். மாற்று கோல் கீப்பர் குரூல் அபாரமாக செயல்பட்டு கோஸ்டாரிகாவின் 2 கோல்களை தடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்திருந்தார். இதே போன்ற மாற்றத்தை இந்த முறை கோச் வான் காலால் செய்ய முடியாமல போனது. ஏனென்றால், போட்டியின் கூடுதல் நேரத்தில் கள வீரர்கள் 3 பேரை அவர் மாற்றியிருந்ததால், அவரால் கோல் கீப்பரை மாற்ற இயலாமல் போனது. இதனால், பெனாலிடி ஷூட்டை வழக்கமான கோல் கீப்பர் சிலெஸ்செனே மேற்கொண்டார்.
பெனாலிடி ஷூட் அறிவிக்கப்பட்டதும் அரங்கில் நிறைந்திருந்த அர்ஜென்டினா ரசிகர்கள் நகத்தை கடித்தபடி, தங்களது அணிக்கு ஆதரவாக உற்சாகக் குரல் எழுப்பினர். பியூனஸ் அயர்ஸ் உள்ளிட்ட அர்ஜென்டினா நாட்டில் உள்ள அனைத்து நகரங்களிலும் தங்களது அணியின் வெற்றிக்காக ரசிகர்கள் பிரார்த்தனை செய்தபடி தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருந்தனர். நெதர்லாந்து நாட்டிலும் இதே நிலைதான். பெனாலிடி ஷூட்டில் அர்ஜென்டினா வீரர்கள் கால்பந்து விளையாட்டு தங்களது ரத்தத்தில் ஊறியது என்பதை வெளிப்படுத்தினார். கேப்டன் மெஸ்சி, ஈகுயில் காரே, செர்ஜியோ அகுரோ, மாக்சி ரோட்ரிக்ஸ் ஆகியோர் தங்களது ஸ்பாட் கிக் வாய்ப்பை கோலாக மாற்றினர். அவற்றை தடுக்க இயலாமல் நெதர்லாந்து கோல் கீப்பர் சிலெஸ்சென் ஏமாற்றமளித்தார். கடைசி வீரராக அர்ஜென்டினாவின் மாக்சி ரோட்ரி க்ஸ் உதைத்த பந்தை சிலெஸ்சென் தடுத்தாலும், பந்து அவரது கையில் பட்டு கோலுக்குள் நுழைந்தது.
ஆனால், அர்ஜென்டினா கோல் கீப்பர் செர்ஜியோ ரெமேரோவோ பெனாலிடி ஷூட்டில் விஸ்வரூபமெடுத்தார். நெதர்லாந்து வீரர்கள் கோலை நோக்கி எந்த திசையில் பந்தை உதைக்கின்றனர் என்பதை கணித்து அவர் பாய்ந்தார். இதில், 2 முறை அவருக்கு வெற்றி கிடைத்தது. நெதர்லாந்து அணியின் அனுபவ வீரர்களான ரான் விலார், வெஸ்லி சினெய்டர் ஆகியோர் உதைத்த ஸ்பாட் கிக் பந்துகளை தடுத்து நிறுத்தினார். இதன் மூலம் 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று 24 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் அர்ஜென்டினா உலக கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. பலமாக பெய்து கொண்டிருந்த மழையையும் பொருட்படுத்தாமல் பெரும்பாலான அர்ஜென்டினா வீரர்கள் தங்களது சட்டையைக் கழற்றியபடி அரங்கிற்குள் உற்சாகம் பொங்க ஓடி ரசிகர்கள் முன்பு நடனமாடி மகிழ்வித்தனர்.
* இறுதிப்போட்டியில் மோதுவதுடன் சேர்த்து ஜெர்மனி-அர்ஜென்டினா அணிகள் இதுவரை உலக கோப்பை யில் 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதே போன்று பிரேசில்-சுவீடன் அணிகளும் இதுவரை 7 முறை மோதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
* மெஸ்சி அர்ஜென்டினாவுக்காக 92 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். டியகோ மரடோனாவை (91) அவர் முந்தியுள்ளார்.
* அர்ஜென்டினா அணியின் 15 மாற்று வீரர்களும் இந்த உலக கோப்பையில் களமிறக்கப்பட்டும், அவர்களில் ஒருவர் கூட கோல் அடிக்கவில்லை.
* பல்டி மன்னனான நெதர்லாந்தின் அர்ஜென் ராபெனால் இந்த போட்டியில் ஒரு முறை மட்டுமே தனது அணியிருக்கு பந்தை பாஸ் செய்ய முடிந்தது.
* ஐரோப்பாவுக்கு வெளியே ஜெர்மனி அணி மூன்றாவது முறையாக உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது. 2002-ம் ஜப்பானில் நடந்த போட்டியில் பிரேசிலுடனும், 1986ல் மெக்சிகோவில் நடந்த போட்டியில் அர்ஜென்டினாவுடனும் மோதிய ஜெர்மனி அவற்றில் தோல்வி கண்டது.
* உலக கோப்பை இறுதிப்போட்டிகளில் அர்ஜென்டினா-ஜெர்மனி அணிகள் மூன்றாவது முறையாக மோதுகின்றன. 1990ல் ஜெர்மனியும், 1986ல் அர்ஜென்டினாவும் வெற்றி கண்டன.