கருணாநிதி பிறந்த நாள் விழா ஏழை பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் திருமண உதவி: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, இலவச சட்ட முகாம் கோடம்பாக்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் சமூக சேவை சட்டகுழு மற்றும் சட்ட சமூக சேவை வலை (WWW.FACEBOOK.COM / LAWTEAMSB ) சார்பில் வங்கி கடன் மற்றும் கல்வி கடன் உதவி, விபத்து வழக்குகளில் நஷ்டஈடு, சட்ட விழிப்புணர்வு-நலத்திட்டங்கள் குறித்து 3 நாள் இலவச சட்ட முகாம் கோடம்பாக்கத்தில் நடந்தது.
இந்த முகாமில், ஏராளமானோர் கலந்து கொண்டு சட்ட ஆலோசனைகள் மற்றும் வங்கி கடன் பெறுவது குறித்து ஆலோசனைகளை பெற்று சென்றனர். மேலும் மாணவர்கள் பலர் கல்வி கடன் பெறுவது தொடர்பான ஆலோசனைகளை பெற்று பயனடைந்தனர். இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமண உதவித்தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குழு தலைவர் வழக்கறிஞர் ஏ.எஸ்.பிலால் செய்திருந்தார். இந்த முகாமில் மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.