மவுலிவாக்கம் கட்டிட விபத்து கட்டிடத்துக்கு அனுமதி கொடுத்த அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்: பாஜ வலியுறுத்தல்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா மாநில துணைத்தலைவர் எச்.ராஜா நேற்று கூறியதாவது:ரயில்வே கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்கின்றன. ரயில்வே துறை ரூ.30 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. பயணிகளுக்கு எந்த வசதியும் இல்லை. சுகாதாரம் இல்லாத பயணத்தை மாற்றி அமைக்க ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடா முயற்சித்துள்ளார்.காங்கிரஸ் அரசு அன்னிய செலாவணி கையிருப்பை விட கடனை அதிகமாக வைத்து சென்றுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ஊழலில் திளைத்த ஆட்சியை காங்கிரஸ் அரசு நடத்தியுள்ளது. ஈராக்கில் நடைபெறும் உள்நாட்டுப்போரால் டீசல், பெட்ரோல் விலையை உயர்த்தவேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்று உச்சநீதிமன்றத்தில் பாஜ அரசு கூறியதாக வந்த செய்தி தவறானது. ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு கச்சத்தீவு சொந்தமானது என்பதில் எங்களுக்கு எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. மலிவுவாக்கம் 11 மாடி கட்டிட விபத்து வழக்கில் கட்டிட அனுமதி அளித்த அதிகாரிகளையும் சேர்த்து அவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும். பாஜ அரசு மக்களுக்கு தற்போது கசப்பு மருந்தை அளித்துள்ளது. நிச்சயம் நாடு நல்ல நிலைக்கு திரும்பும். இவ்வாறு எச்.ராஜா கூறினார்.