போக்குவரத்து துறை ஊழியர்கள் அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்க கோரிக்கை
சென்னை: கடந்த ஆண்டில் போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலை படி உயர்வு இதுவரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது என்று தொழிற்சங்க நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களில் டிரைவர்கள், கண்டக்டர்கள், அலுவலர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 764 பேர் பணி புரிந்து வருகின்றனர். அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படுவதை போல இவர்களுக்கும் ஆண்டு தோறும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2013ம் ஆண்டுக்கான அகவிலைப்படி உயர்வு முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி அகவிலை படி உயர்வை போக்குவரத்து கழகம் வழங்காமல் இழுத்தடித்து வருவதாக தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இது குறித்து தமிழ்நாடு போக்குவரத்து பணியாளர் சம்மேளன நிர்வாகிகள் கூறியதாவது:கோவை உள்ளிட்ட 8 கோட்டங்களில் அகவிலைப்படி உயர்வை ஊழியர்களுக்கு வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். எனவே தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு, போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.