வீடு புகுந்து பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற 3 பேர் சிக்கினர்
சென்னை: விருகம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் செயின் பறிக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சாலிகிராமம் வெங்கடேசன் நகரை சேர்ந்தவர் சுப்பையா (65), கான்ட்ராக்டர். இவர், கடந்த 8ம் தேதி வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி சரசு (40), உறவினர் வள்ளி ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது, பிற்பகல் 2 மணிக்கு 3 பேர் சுப்பையா வீட்டிற்கு வந்தனர்.குடிக்க தண்ணீர் கேட்டனர். வள்ளி தண்ணீர் எடுக்க புறப்பட்டபோது, வந்தவர்களில் ஒருவர் திடீரென வள்ளி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி செயினை கொடுக்கும்படி மிரட்டினார். இதை சற்றும் எதிர்பாராத அவர் கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு சரசு அங்கு வந்தார். அவரும் கொள்ளையர்களை பார்த்து கூச்சலிட்டார்.
இருவரின் கூச்சலையும் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். ஒருவரை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் ஊத்துக்கோட்டையை சேர்ந்த பவுன்ராஜ் (25) தப்பி ஓடியது அவரது மைத்துனர் விருகம்பாக்கத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி (23) மற்றும் சதீஷ் (29) என்பது தெரிய வந்தது. மற்ற இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சதீஷ், சுப்பையாவிடம் ஏற்கனவே, வேலை செய்துள்ளார். சுப்பையாவிடம் அதிக பணம் புழங்கியதை தொடர்ந்து அவரது வீட்டிற்கள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.