சில்லரையில் சிகரெட் விற்க இமாச்சல பிரதேசத்தில் தடை : புகைபிடிப்பதை தடுக்க முயற்சி
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் சிகரெட் டப்பாக்களை பிரித்து, ஒவ்வொரு சிகரெட்டாக சில்லறையில் விற்பதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது.இமாச்சல பிரதேச மாநிலத்தில் இளைஞர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை தடுப்பதற்காக மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, தற்போது மாநிலம் முழுவதும் சிகரெட் விற்பனையில் புதிய நிபந்தனைகளை மாநில அரசு அறிவித்துள்ளது. இதில், சிகரெட் டப்பாக்களை பிரித்து தனித்தனி சிகரெட்டுகளாக விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு டப்பாவாக வாங்க வேண்டுமென்றால் அதிக பணம் தேவைப்படும். எனவே, கல்லூரி, பள்ளி செல்லும் மாணவர்கள் சிகரெட் வாங்குவது குறையும்.
இதனால், அவர்கள் மத்தியில் புகை பிடிக்கும் வழக்கம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிகரெட் மீதான வாட் வரியை 36 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தவும் இமாச்சல அரசு திட்டமிட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கவுல் சிங் தாகூரும் இதனை உறுதிபடுத்தியுள்ளார். ஏற்கனவே, கடந்த ஆண்டில் சிகரெட் மீதான வாட் வரியை இமாச்சல பிரதேச அரசு 18 சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாக உயர்த்தியது. தற்போது நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் மேலும் அதிகரித்து 50 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில்தான் சிகரெட் மீதான வாட் வரி அதிகமாக விதிக்கப்படுகிறது. ஆனால், அங்குதான் அதிகமான புகையிலைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன என்று கவுல் சிங் தாகூர் மேலும் தெரிவித்தார்.