பாஜ மாநில துணை தலைவர் ராஜாவுக்கு கொலை மிரட்டல் மர்ம கடிதத்தால் பரபரப்பு
காரைக்குடி: காரைக்குடி சுப்பிரமணியபுரம் 9வது வடக்கு விரிவாக்க பகுதியில் பாஜ மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜாவின் வீடும் அலுவலகமும் உள்ளது. நேற்று காலை 10 மணியளவில் அங்கு துப்பாக்கி ஏந்திய ஆயுதப் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவரது வீட்டுக்கு மர்ம கடிதம் ஒன்று வந்தது. வீட்டில் இருந்தவர்கள் அந்த லட்டரை பிரித்து படித்தனர். அதில், ‘உன்னை போட்டுத் தள்ள திட்டமிட்டிருக்கிறோம்‘ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ரவீந்திரன் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மர்ம கடிதத்தை அனுப்பிய நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு காரைக்குடி அருகே அழகாபுரியில் உள்ள ராஜாவின் பண்ணை வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் உள்ள நிலையில், தற்போது கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஹெச்.ராஜா கூறுகையில், ஏற்கனவே பண்ணை வீட்டை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்தும், 6 மாதங்களுக்கு முன்பு ஈமெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபர்களையும் போலீசார் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. இந்த நிலையில் தபால் மூலம் கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இது குறித்து மத்திய, மாநில பா.ஜ. நிர்வாகிகளிடம் முறையிட உள்ளேன் என்றார்.