மீனம்பாக்கம்: ஈராக்கில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தினமும் ஈராக்கில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வரப்படுகின்றனர். நேற்று டெல்லிக்கு வந்த விமானத்தில் 200 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 17 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்று அவர்களை இன்று காலை 10 மணிக்கு சென்னைக்கு வந்த விமானத்தில் அனுப்பி வைத்தனர்.சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் வரவேற்றனர். உள்பகுதியிலேயே அமர வைத்து காலை உணவு கொடுத்து உபசரித்தனர். 13 பேர் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்பட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள். பிற்பகல் மதுரைக்கு செல்லும் விமானத்தில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். 3 பேர்களான நாகமணி (36), விஜயகுமார் (33), ராஜா (31) ஆகியோர் கட்டிட தொழிலாளர்கள், நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்தவர்கள். மற்றொருவர் சமையல்காரர் சண்முகம் (37), மன்னார்குடி அருகில் உள்ள அழகப்பா சமுத்திரத்தை சேர்ந்தவர்.
இவர்கள் நிருபர்களிடம் கூறியது:ஒன்று, இரண்டு ஆண்டுகள் என கட்டிட வேலை மற்றும் சமையல் வேலைக்காக பாக்தாத்தில் உள்ள பக்ரா பகுதிக்கு சென்றோம். நன்றாக சம்பாதித்தோம். போர் தென்பட்டதும் சம்பளம் தரவில்லை. 4 மாதம் பாக்கி உள்ளது. போர் தொடங்கிய பின்பு நிறுவனங்களை மூடி விட்டனர். நாங்கள் இருந்த பகுதியில் குண்டு வெடிக்கவில்லை. ஆனாலும் சுற்றுவட்டாரத்தில் கடுமையாக போர் நடந்தது. 24 மணி நேரமும் குண்டு வெடிக்கும் சத்தமும், மரண சத்தமும், அழுகுரலும் கேட்டது. அதனால் சம்பள பாக்கியை வாங்கி விட்டு சொந்த ஊருக்கு செல்ல ஈராக்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் முறையிட்டோம். அவர்கள் இந்திய விமானத்தில் அனுப்பி வைத்தனர். எங்கள் நண்பர்கள் 6 பேர் ஈராக்கில் காத்திருக்கின்றனர். அடுத்த நாள் விமானத்தில் அனுப்பி வைப்பதாக அங்குள்ள அதிகாரிகள் கூறினர். நாங்கள் வசித்த நகரில் இன்னும் 400 தமிழர்கள் தவிக்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.