டெல்லியில் இன்று காலை பா.ஜ. தலைமை அலுவலகத்தில் 3 மர்ம பை கிடந்ததால் பரபரப்பு: தம்பதியிடம் விசாரணை
புதுடெல்லி: டெல்லியில் பா.ஜ. தலைமை அலுவலகத்துக்கு வெளியே இன்று காலையில் கேட்பாரற்று 3 பைகள் கிடந்தன. இதனால், அங்கு வெடிகுண்டு பீதி கிளம்பி பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் வந்து அவற்றை சோதனையிட்டதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரிய வந்தது. டெல்லியில் அசோகா சாலையில் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு வெளியே இன்று காலை 8 மணியளவில் 3 மர்மப் பைகள் கேட்பாரற்று கிடந்தன. அப்பகுதியில் அந்த பைகள் நீண்ட நேரம் கிடந்ததால், அந்த பைகளில் வெடிகுண்டு இருக்குமோ என்று கட்சியினரிடையே பீதி கிளம்பியது.
இதைத் தொடர்ந்து, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. டெல்லி போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்து சோதனை செய்தனர். அந்த பைகளில் வெடிகுண்டு பொருட்கள் எதுவும் இல்லை. ஏராளமான துணிமணிகளும் வீட்டு உபயோகப் பொருட்களும் இருந்தன. இது பற்றி, கட்சி அலுவலகத்திற்கு வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு ஒரு தம்பதியர் ஓடி வந்தனர். அவர்கள் போலீசாரிடம் தாங்கள் டெல்லியை சுற்றி பார்க்க வந்ததாகவும், பசி எடுத்ததால் பா.ஜ. அலுவலகத்துக்கு வெளியே 3 பைகளையும் வைத்துவிட்டு, அருகே உள்ள ஆந்திர பவனில் சிற்றுண்டி சாப்பிடச் சென்றதாகவும் கூறினர். எனினும், அவர்களை போலீசார் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். ‘அந்த தம்பதியிடம் விசாரித்ததில் அவர்கள் சுற்றுலா பயணிகள் என தெரியவந்துள்ளது, அதனால் பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை’ என்று டெல்லி போலீஸ் கூடுதல் கமிஷனர் எஸ்.பி.எஸ்.தியாகி கூறினார்.