தெலங்கானா கவர்னருக்கு போலீஸ் அதிகாரம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு : டிஆர்எஸ் கட்சி முடிவு
ஐதராபாத்: தெலங்கானா கவர்னருக்கு போலீஸ் அதிகாரம் வழங்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியும், எம்ஐஎம் கட்சியும் முடிவு செய்துள்ளன. ஐதராபாத் நகரம் தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தின் பொது தலைநகராக 10 ஆண்டுகளுக்கு இருக்கும் என ஆந்திர மறு சீரமைப்பு சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் ஐதராபாத் நகரின் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு அதிகாரம் தெலங்கானா கவர்னர் கையில் ஒப்படைக்கப்படும் எனவும் அந்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அமல்படுத்தும் வகையில் இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை நேற்று முன்தினம் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு மத்திய அரசு அனுப்பியது.
மாநில அரசின் போலீஸ் அதிகாரத்தை கவர்னர் கையில் ஒப்படைப்பதை ஏற்க முடியாது என சந்திரசேகர்ராவ் அறிவித்தார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்ப்பை தெரிவிக்குமாறு தனது எம்பிக்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரவும் டிஆர்எஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்கு ஐதராபாத்தில் செல்வாக்காக இருக்கும் எம்ஐஎம் முஸ்லிம் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. இரண்டு கட்சிகளும் தனித்தனியாக அல்லது கூட்டாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளன. இது குறித்து டிஆர்எஸ் எம்பி வினோத் குமார் கூறுகையில், சட்டம் ஒழுங்கு பிரச்னை மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டதாகும். மற்ற மாநிலங்களை போலவே தெலங்கானாவின் உரிமைகளை மத்திய அரசு மதிக்க வேண்டும். மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு தட்டிப்பறிக்க கூடாது என்றார்.