சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே குடும்பத்தில் சொத்து பிரிப்பதில் தகராறு: ஐகோர்ட்டில் இளையமகன் வழக்கு
மும்பை: சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் குடும்பத்தில் சொத்து சண்டை ஏற்பட்டுள்ளது. பால் தாக்கரே விட்டு சென்ற உயில் செல்லாது என அவரது இளைய மகன் ஜெயதேவ் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை நிறுவிய பால்தாக்கரே, கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி காலமானார். அவருக்கு உத்தவ்தாக்கரே, ஜெய்தேவ் தாக்கரே ஆகிய 2 மகன்களும், பிந்துமாதவ் தாக்கரே என்ற மகளும் உள்ளனர். தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்னரே ஜெய¢தேவ் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். பால்தாக்கரே மறைவுக்கு பின்னர் சிவசேனா கட்சி தலைவராக உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் தாக்கரே விட்டு சென்ற உயிலின்படி அவரது பெரும்பாலான சொத்துக்கள் உத்தவ் தாக்கரேவுக்கும், சில சொத்துக்கள் மகள் பிந்து மாதவ் தாக்கரேவுக்கும் சொந்தம் என அறிவிக்கப்பட்டது.
இளைய மகன் ஜெயதேவ் பற்றி பால் தாக்கரே தனது உயிலில் ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லை. இதை எதிர்த்து ஜெயதேவ், மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். பால்தாக்கரே மனநிலை சரியில்லாத போது போலியாக இந்த உயில் தயாரிக்கப்பட்டிருப்பதாக ஜெயதேவ் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, பால்தாக்கரே உயிலை அமல்படுத்த உத்தவ் தாக்கரேவுக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கில் கூறியிருந்தார்.இந்த வழக்கை நீதிபதி ஆர்.டி.தனுகா விசாரித்து, சகோதரர்கள் இருவரும் தனித்தனியாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். பால் தாக்கரே விட்டு சென்றதாக கூறப்படும் உயில் உண்மையில் அவர் எழுதியது தானா? அப்போது அவர் நல்ல மனஆரோக்கியத்துடன் இருந்தாரா? மோசடியான முறையில் உயில் தயாரிக்கப்பட்டதா என்பது குறித்து இரு சகோதரர்களும் ஆதாரங்களுடன் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.