நெய்மருக்கு எலும்பு முறிவு
கொலம்பியாவுக்கு எதிரான காலிறுதிப்போட்டியில் 86வது நிமிடத்தில் உயரப்பறந்த பந்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்ற கொலம்பிய தடுப்புக்கள வீரர் ஜூவான் காமிலோ சுனீகா, நெய்மருக்கு பின்புறம் எழும்பிக் குதித்தார். அப்போது அவரது முழங்கால், நெய்மரின் முதுகில்பட்டது. கீழே விழுந்த நெய்மார் வலியால் துடித்தார். இதையடுத்து, அணியின் டாக்டர்கள் களத்துக்குள் வந்து பரிசோதனை செய்தனர். அவரால் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால் களத்தில் இருந்து கண்ணீருடன் ஸ்டிரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்டார். தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நெய்மருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் அவருக்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால், ஜெர்மனி அணிக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் நெய்மர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரேசில் அணி டாக்டர் ரோட்ரிகோ லாஸ்மெர் கூறுகையில், ‘‘விளையாடும் நிலையில் அவரது உடல்நிலை இல்லை. அவர் மீண்டும் உடல் தகுதி பெற சில வாரங்கள் தேவைப்படும். இது மிகவும் வருத்தமான விஷயம்,’’ என்றார்.