கூடங்குளம் அணு மின்நிலையம் பல்வேறு எதிர்ப்புகளை கடந்து தற்போது உற்பத்தியை தொடங்கி விட்டது. அணு மின்நிலைய எதிர்ப்பாளர்கள் அவ்வப்போது தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். இதற்கிடையே, அந்த பகுதியில் இரு பிரிவினரிடையே சில மாதங்களாக தொடர்ந்து கோஷ்டி மோதல்கள் நடைபெற்று வருகின்றன. அவர்கள் அணு உலை ஆதரவு, எதிர்ப்பு கோஷ்டிகளாக தங்களை அடையாளம் காட்டிக் கொள்கின்றனர். இரு பிரிவினரும் தங்கள் வீடுகளிலேயே நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து மோதலின் போது பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பரில் இடிந்தகரை சுனாமி காலனியில் உள்ள ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். அதே போல், கடந்த மாதம் 24-ம் தேதி இடிந்தகரை மாதா கோயில் அருகே இரு பிரிவினரும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி மோதிக் கொண்டனர். இதன்பின், அணு உலை ஆதரவு, எதிர்ப்பு கோஷ்டியினர் மாறி, மாறி மாவட்டக் கலெக்டரிடம் புகார் கொடுத்தனர். அதில் எதிர்தரப்பினர் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக குற்றம்சாட்டினர். ஆனாலும், அரசு தரப்பில் சமரச பேச்சு நடத்தப்பட்டதே தவிர, உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. வெடிகுண்டுகள் தயாரிப்பதை தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொண்ட தாகவும் தெரியவில்லை.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கூட, அந்த பகுதியில் கூத்தங்குழி பாத்திமா நகர் பகுதியில் நடந்த மோதலில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் 2 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 36 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன், 82 நாட்டு வெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். கூத்தங்குழி, இடிந்தகரை பகுதியில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பதால் மீனவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.கூடங்குளம் பகுதியிலும் இரு பிரிவினரும் தற்போது எதிர்தரப்பினரை தாக்குவதற்காகவே வீடுகளில் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து பதுக்கி வைக்கின்றனராம். இப்போது இதை அரசு கண்டுகொள்ளாமல் விட்டால், வெடிகுண்டு தயாரிப்பது சர்வசாதாரணமாகி விடும். போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தி வெடிகுண்டுகள் தயாரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், பின்னாளில் பெரிய அசம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்பாக அமைந்து விடும். இரு பிரிவினரிடமும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதுடன், வெடிகுண்டு தயாரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அரசு முன்வர வேண்டும்.