ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்
காபூல்:ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூல் விமானநிலையத்தில் தீவிரவாதிகள் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அதிபரின் ஹெலிகாப்டர் முற்றிலும் உடைந்து நொறுங்கியது. மேலும், 3 ஹெலிகாப்டர்களும் சேதமடைந்தன. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சர்வதேச விமானநிலையம் உள்ளது. இங்கிருந்து துபாய், டெல்லி மற்றும் இஸ்தான்புல் நகரங்களுக்கு நாள்தோறும்விமானங்கள் செல்கின்றன. இந்த விமானநிலையத்தில் நேட்டோ நாடுகளின் விமானப்படை தளமும் உள்ளது. இந்நிலையில், தலிபான் தீவிரவாதிகள் நேற்று ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில், விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆப்கன் அதிபரின் ஹெலிகாப்டர் தீப்பிடித்து முற்றிலும் சேதமடைந்தது. மேலும் 3 ஹெலிகாப்டர்கள் பலத்த சேதமடைந்தன. இது குறித்து, ஆப்கன் ராணுவ மேஜர் ஜெனரல் அப்சல் அமான் கூறுகையில், ‘தலிபான் தீவிரவாதிகளின் ஏவுகணை தாக்குதலில், அதிபரின் ஹெலிகாப்டர் சின்னாபின்னமாக சிதறியது. அருகே நின்றிருந்த 3 ஹெலிகாப்டர்களும் சேதமடைந்தன’ என்று கூறினார். நேற்று முன் தினம், தலிபான் தீவிரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் பயணம் செய்த பஸ் முற்றிலும் எரிந்து சேதமானது. இந்தத் தாக்குதலில் 8 ராணுவ அதிகாரிகள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.