தமிழகத்தில் உள்ள கீழ் நீதிமன்றங்களில் இனிமேல் தமிழில் மட்டுமே தீர்ப்பு வெளியிடப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இதே கோரிக்கையை வலியுறுத்திய ஒரு ரிட்மனு முதலில் தள்ளுபடியானது. ஆனாலும், தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தில் கடந்த 1976ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட ஒரு திருத்தத்தில், சென்னை உயர்நீதிமன்ற எல்லைக்குள் உள்ள கீழ் நீதிமன்றங்கள் அனைத்திலும் தமிழில் மட்டுமே விசாரணை நடத்தி, தமிழில்தான் தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்தில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென தமிழை தாய்மொழியாக கொண்டிருக்காத நீதிபதிகள் கோரிக்கை விடுத்தனர். இதை பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு, அவர்கள் மட்டும் ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுத அனுமதித்தது. இதனடிப்படையில் உயர்நீதிமன்ற பதிவாளர் அனைத்து நீதிமன்றங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். இந்நிலையில், வக்கீல் ரத்னம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். அதில், பதிவாளரின் சுற்றறிக்கை, ஆட்சிமொழிச் சட்டத் திருத்தத்திற்கு எதிரானது என்று வாதாடினார். இதை ஏற்று, சுற்றறிக்கையை ரத்து செய்து உயர்நீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பளித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க தீர்ப்பு. கீழ் நீதிமன்றங்களில் தமிழில் விசாரணை நடத்தப்படுவதும், தமிழில் தீர்ப்பு வெளியிடுவதும் நீதிமன்றங்களுக்கு செல்லும் ஆங்கிலம் தெரியாத சாதாரண மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்.
இதே போல், மத்திய அரசின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக என்றாவது ஒரு நாள் தமிழ் சேர்க்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அரசியல் சட்டத்தின் 8வது அட்டவணையில் தமிழ் உள்பட 22 மொழிகள் உள்ளன. இந்த மொழிகள் அனைத்தையும் மத்திய அரசின் ஆட்சி மொழியாக்க வேண்டுமென்று நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசோ ஆங்கிலத்தையே விட்டு விட்டு, இந்தியை மட்டுமே ஆட்சிமொழியாக்க அவ்வப்போது முயற்சித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் தமிழகம் உள்பட திராவிட மொழிகள் பேசும் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அந்த முயற்சி இதுவரை பலிக்கவில்லை. எனவே, மத்திய அரசின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக தமிழை ஆக்குவதற்கு இன்னும் நீண்ட போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. இதற்கிடையே, தமிழக அரசிலேயே இன்னும் பல துறைகளில் தமிழை விடுத்து பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே கோப்புகள் தயாரிக்கப்படுகின்றன. பல உத்தரவுகளும் ஆங்கிலத்தில் பிறப்பிக்கப்படுகின்றன. தமிழ் வளர்ச்சித் துறை திடீர், திடீரென விழித்து கொண்டு, ஓரிரு சுற்றறிக்கைகளை மட்டும் அனுப்புகிறது. ஆனாலும், தமிழக அரசின் பல துறைகளில் ஆங்கில பயன்பாடு இன்னும் அதிகமாகவே காணப்படுகிறது. இதை மாற்றி தாய்மொழி தமிழ்மொழியை மட்டுமே முழுமையாக பயன்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.