துபாய்:சவுதி அரேபியாவில் முறையான பாஸ்போர்ட், விசா இல்லாமல் சுற்றிய 21 இந்தியர்கள் உட்பட 282 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.சவுதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டினர் பலர் தங்களது விசா காலம் முடிவடைந்தும் நாட்டை விட்டு வெளியேறாமல் முறைகேடாக குடியிருக்கின்றனர். இவர்களை அந்நாட்டு குடியேற்ற துறை அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்து வருகின்றனர். ரியாத் அருகே புறநகர் பகுதிகளில் இருக்கும் விவசாய பண்ணைகள், கிராமங்கள் மற்றும் ஒட்டக தொழுவங்களில் பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாமல் முறைகேடாக குடியேறியவர்கள் பணிபுரிவதாக அந்நாட்டு அரசுக்கு தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் கடந்த வாரம் போலீசாருடன் சென்று அப்பகுதிகளில் ரெய்டு நடத்தினர். அப்போது, முறையான பாஸ்போர்ட், விசா இல்லாமல் இருந்த 134 எத்தியோப்பியர்கள், ஏமனை சேர்ந்த 76 பேர், 21 இந்தியர்கள், பாகிஸ்தானை சேர்ந்த 21 பேர், பங்களாதேசை சேர்ந்த 4 பேர், சூடானை சேர்ந்த 17 பேர் மற்றும் சோமாலியா, சிரியாவை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.கைதானவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.16 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என்று அந்நாட்டு தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.