சென்னை பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான முதல் கட்ட கவுன்சலிங் வரும் 7ம் தேதி தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 571 பொறியியல் கல்லூரிகளில் 2 லட்சத்து 5463 இடங்கள் உள்ளன. இதில், 1 லட்சத்து 76 ஆயிரம் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். விளையாட்டு ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சலிங் முடிந்து, பொது பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் தொடங்குவதாக இருந்தது.
இந்நிலையில், அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில்(ஏஐசிடிஇ), உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், தற்போது, புதிதாக 529 பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன என்றும், அவற்றின் விண்ணப்பங்களை பரிசீலிக்க கால அவகாசம் வேண்டுமென்றும் கோரியது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், விண்ணப்பங்களை பரிசீலிக்க கவுன்சிலுக்கு 7 நாட்கள் அவகாசம் அளித்தது. புதிய கல்லூரிகளையும் கவுன்சலிங்கில் சேர்க்க வசதியாக, கவுன்சலிங்கை தள்ளி வைக்கவும் உத்தரவிட்டது. எனினும், முதல் கட்ட கவுன்சலிங்கை ஜூலை 15ம் தேதிக்குள்ளும், 2ம் கட்ட கவுன்சலிங்கை ஜூலை 22ம் தேதிக்குள்ளும், இறுதி கட்ட கவுன்சலிங் ஜூலை 29ம் தேதிக்குள்ளும் முடிக்க வேண்டும். ஆகஸ்ட் 1ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது பிரிவு கவுன்சலிங் மறுதேதி அறிவிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், புதிய பொறியியல் கல்லூரிகளின் விண்ணப்பங்கள் மீது ஏஐசிடிஇ முடிவெடுத்து விட்டதாகவும், அந்த விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி விட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து, பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான பொது பிரிவு கவுன்சலிங் வரும் 7ம் தேதி தொடங்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.